அய்யோ எனக்கு ரொம்ப பயம்.. நோ சொல்லிட்டேன்.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்
சென்னை: தமிழ், தெலுங்கும், ஹிந்தியில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அழகு மட்டுமின்றி திறமையையும் கொண்டிருக்கும் அவர் மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து; நல்லவேளை கீர்த்தி சுரேஷ் அதை மிஸ் செய்யவில்லை என்று கமெண்ட்ஸ்களை சந்தித்துவருகிறது.
மலையாள திரையுலகத்தில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம்தான் கீர்த்திக்கு தமிழில் முதல் படம். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனால் வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து சரசரவென்று முன்னேறினார். ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்திலும் நடித்தார்.

தேசிய விருது: இதற்கிடையே நடிகையர் திலகம் என புகழப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் மகாநடி என்றும்; தமிழில் மகாநடிகை என்றும் படம் ரிலீஸானது. அச்சு அசல் சாவித்திரியை போலவே தனது உடல்மொழி, குரல் மொழியில் மிரட்டியிருந்த கீர்த்திசிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்று அசத்தினார். தேசிய விருது வென்றதன் காரணமாக மலைபோல் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ட்விஸ்ட் அடிக்கும் விதமாக அதற்கு பிறகுதான் அவருக்கான சான்ஸ்கள் குறைந்தன.
மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படம் அவர் மீண்டும் பெரிய ரவுண்டு வர வழி வகுத்தது. தொடர்ந்து சைரன், ரகுதாத்தா போன்ற படங்களில் நடித்த அவர் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்த கீர்த்தி: இதற்கிடையே அவர் தனது நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்ய முடிவெடுத்து கோவாவில் வைத்து திருமணமும் செய்துகொண்டார். ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அந்தத் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. மணம் முடித்த பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார் கீர்த்தி சுரேஷ். சூழல் இப்படி இருக்க மகாநடி படத்தில் நடித்தது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது.
கீர்த்தியின் பேட்டி: அந்தப் பேட்டியில் அவர், "மகாநடி படத்தில் முதலில் பயத்திலேயே நோ சொல்லிவிட்டேன். எல்லோருமே ஏன் இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்டை வேண்டாம் என்று சொல்கிறாய் என கேட்டார்கள். ஆனால் இப்போது நினைத்து பார்த்தால் அது எல்லாமே மேஜிக் மாதிரி இருக்கிறது. அந்தப் படத்துக்கு பிறகு எனக்கு நிறைய பயோபிக் ஆஃபர்கள் வந்தன. ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏனெனில் எல்லா நேரமும் அது ஒர்க் ஆகும் என்று தெரியாது" என்றார்.