என்ன டியூட் இதெல்லாம்.. கையில் தாலியுடன் ப்ரோபோஸ் செய்த கூமாபட்டி தங்கபாண்டி.. பதறிய மமிதா பைஜு
கீர்த்திவாசன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்திருக்கும் டியூட் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 17அம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்துடன் பைசன், டீசல் என இரண்டு படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. எனவே இந்த தீபாவளி மூன்று இளம் ஹீரோக்களுக்கான போட்டியாக மாறியிருக்கிறது. இந்நிலையில் ட்யூட் பட ப்ரோமோஷனில் கூமாபட்டி தங்கபாண்டி அலப்பறையை கூட்டியிருக்கிறார்.
தீபாவளி பண்டிகை என்றாலே தமிழ்நாட்டில் திரையரங்குகள் களைகட்டும். 80கள், 90களில் கமல், ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்டோரின் படங்கள் ஒரே நாளில் களமிறங்கி போட்டி பலமாக இருக்கும். அதேபோல் 90களின் பிற்பகுதிகள், 2000களின் ஆரம்பத்தில் அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் களமிறங்கும். இதனால் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் கட் அவுட்டுகள், சண்டைகள் என அலப்பறையை கூட்டுவார்கள்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கேற்ப தற்போதைய காலகட்டத்தில் அனைத்துமே மாறிவிட்டன. மேற்கூறிய ஹீரோக்களுக்கு வயதாவது, அவர்களது பயணம் வேறு தளத்தில் செல்வது என இருப்பதால் கோலிவுட்டில் இளம் ஹீரோக்களின் படை இறங்கியிருக்கிறது. அந்தவகையில் இந்த தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய படங்கள் 17ஆம் தேதி ரிலீஸாகின்றன.
மூன்று படங்களுக்குமே பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அதிலும் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டியூட் படத்துக்கு அதீத ஆவல் இருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்னர் அவர் நடிப்பில் வெளியான டிராகன், லவ் டுடே ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காண்பித்தது. எனவே இந்தப் படமும் அதே போன்ற ரிசல்ட்டை பெற்று 100 கோடி ரூபாய் வசூலில் ஹாட்ரிக் அடித்த ஹீரோ என்ற பெருமையை பிரதீப் பெறுவாரா என்று திரைத்துறை காத்திருக்கிறது.
இந்தப் படத்தில் இன்னொரு ஹைலைட்டாக இருப்பவர் மமிதா பைஜு. பிரேமலு படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அவர் வணங்கான் படத்திலேயே அறிமுகமாகியிருக்க வேண்டியவர். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது டியூட் படத்தில் நடித்திருப்பதால் பிரேமலு எஃபெக்ட்டை இதிலும் கொடுப்பார் என்றே நம்பலாம். ட்ரெய்லரிலும் அவரது ப்ரெசன்ஸ் கவனத்தைத்தான் ஈர்த்திருக்கிறது.
பட ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். பிரதீப் மேடையேறும்போது பறந்த விசில்களுக்கு இணையாக மமிதா மேடையேறும்போதும் விசில்கள் பறந்தன. அவருக்கு இருக்கும் ரெஸ்பான்ஸை பார்க்கையில் கண்டிப்பாக கோலிவுட் அவருக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் என்று நம்பலாம்.
இந்த ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில், சோஷியல் மீடியா மூலம் பிரபலமடைந்த கூமாபட்டி தங்கபாண்டியும் வந்திருந்தார். கேரளா ஸ்டைலில் உடை அணிந்து கையில் தாலியுடன் வந்த அவர், 'எனது அம்மா உங்களுக்கு இந்த கிஃப்ட்டை கொடுக்க சொன்னார்' என கூற; பதறிய மமிதாவோ, 'நான் உங்களை அண்ணன் என்றுவேறு சொல்லிவிட்டேன். ரசிகர்கள் ஒத்துக்கொண்டால் இந்த கிஃப்ட்டை நான் வாங்கிக்கொள்கிறேன். ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை' என கூறிவிட்டார். மேலும், மமிதாவிடம் மலையாளத்தில் ஐ லவ் யூ சொன்ன கூமாபட்டியை கூலாக ஹேண்டில் செய்துவிட்டு அவருடன் சேர்ந்து டியூட் பட பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.