சசிகுமார், விஜய் சேதுபதி அரசியலுக்கு வரலாம்.. விஜய்க்கு தகுதி இல்லை.. கிழித்தெடுத்த பிரபலம்.. என்ன கோபமோ?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய்; இந்த மாதம் நடக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களமிறங்கியிருக்கிறார். பெரம்பூரிலும், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் அவர் பரப்புரையையும் தொடங்கிவிட்டார். இந்நிலையில் அவரை பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்டிருக்கிறார். அது விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஏன் நடிகர் விஜய்க்கு 2026 தேர்தலில் வாக்களிக்கக் கூடாது? 1. அவர் ஒரு நடிகர் மட்டுமே. அரசியலுக்கு வர விரும்புகிறார் என்றால், வந்து சமூகத்தில் மக்களோடு மக்களாக பல பரிமாணங்களிலும் செயல்பட்டு, மக்களையும் மக்கள் வாழ்க்கை முறையையும், அவர்களது பிரச்சனைகளயும், சமூகத்தையும் அதன் செயல்பாடுகளையும், இம்மண்ணின் வரலாற்றையும், அதன் எதிர்காலச் சவால்களையும், முன்னேற்றத்தின் தடைகளையும் அவற்றிற்கு தீர்வுகளையும் கொஞ்சமேனும் அறிந்து, உணர்ந்து, குறைந்தபட்சத் தெளிவுடன் இருக்கவேண்டும். இன்றைய நிலையில் அவருக்கு இது எதுவுமே இல்லை. அவருக்கு அந்தக் காலத்தை நாம் கொடுக்க வேண்டும்.

2. அப்படியென்றால் சினிமாவிலிருந்து எவருமே வரக்கூடாதா? வரலாம். பலர் வரலாம். அரசியலில் செயல்பட ஒருவரது வாழ்க்கைப் பின்னணி ஒரு மிகப்பெரிய காரணி. எடுத்துக்காட்டாக, நடிகர்/இயக்குநர் சசிகுமார் வரலாம். தொழிலதிபர் குடும்பத்தில் வளர்ந்தவர். கடை, வணிகம், வாடிக்கையாளர், பேரம், லாப-நட்டம், கொடுக்கல்-வாங்கல், பண இழுத்தடிப்பு, ஏமாற்றுபவர், நேர்மையானவர், கஞ்சன், பித்தலாட்டக்காரர் என அன்றாடம் பலவகை மக்களையும், பலவகைச் சூழல்களையும் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர். சமூகம் தெரியும், அதன் போக்கு தெரியும். வணிகரின் பிரச்சனை, மக்களின் பிரச்சனை, பொருளாதாரம், வாழ்வியல் போன்றவை தெரியும்.
விஜய் சேதுபதி, வளைகுடா நாடுகளில் அடிமட்டப் பணிகள் செய்தவர். இயல்பு வாழ்க்கை வாழ்ந்தவர். நட்பு, எதிர்ப்பு, துரோகம், மனமுறிவு, முதலாளி, தொழிலாளி, தொலைதூரத்தில் குடும்பத்திற்காக உழைப்பு, பிரிவு, தியாகம், தனிமை, உறவு ஏக்கம், சிக்கனம், சேமிப்பு என பலவித அனுபவங்களை நேரடியாகச் சுவைத்துப் பண்பட்டச் சாமானியர். இப்படிப் பலரைச் சொல்லலாம். அவர்களுக்கு வாழ்வின் தன்மை தெரியும். பாமரனின் வாழ்க்கைப் போராட்டங்களும், எதிர்காலக் கனவுகளும் புரியும். இவர்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் அன்றே தொடங்கலாம் தங்கள் பயணத்தை.
3. ஒரு பெரிய இயக்குநரின் பிள்ளையாக பிறந்து வளர்ந்து, செல்வச் செழிப்பில் திளைத்து, படிப்போ உழைப்போ தேவையற்ற அல்லது தேவை என்று உணரமுடியாத சூழலில் வளர்ந்தவர் விஜய். படிப்பை நிறுத்திவிட்டு நடிகனாகும் ஆசையை தந்தையிடம் தெரிவித்து, அவர் தயவில் அறிமுகப்படுத்தப்பட்டு, தூக்கி நிறுத்தப்பட்டவர்.
30 ஆண்டுகளாக நடிகராக மட்டுமே இருந்து வரும் அவருக்கு எல்லாவிதச் சேவைகளையும் செய்ய சுற்றிலும் பணியாட்கள். அதுவும், சினிமாவில் எப்படித் தாங்குவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தரையில் கால்பதிக்க விடமாட்டார்கள். அதுவும், விஜய் போன்ற ஒரு கதாநாயகனுக்கு எப்படிப பணிவிடைகள் செய்யப்பட்டிருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.
அவர் ஒரு கூட்டுப்புழு. இது மிகையல்ல. கேரவன் வாழ்க்கை வாழ்ந்தார். உயரம் செல்லச்செல்ல தனிமைதானே. அவர் மனம் கோணாதபடிதான் எல்லாரும் நடந்துகொள்வர் - தயாரிப்பாளர் தொடங்கி, வினியோகஸ்தர் வரை. நாயகன் இத்துறையில் வைத்ததுதான் சட்டம்.
4. விஜய்யை இப்படிச் சொல்லும்போது, அவர் ஆதரவாளர்கள் உடனே கோபத்துடன் கேட்கும் கேள்வி - "உதயநிதியும் நடிகன்தானே? அவர் எல்லாம் கத்துக்கிட்டுதான் வந்தாரா? நீங்க சொல்றதெல்லாம் அவருக்குத் தெரியுமா?" என்பதுதான்.
உதயநிதி நடிகர் அல்ல; அவர் நடிக்கவும் செய்தார் என்பதுதான் சரி. எல்லாருக்கும் வருகிற ஆசைதான். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிகரா? உதயநிதி பல தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தியவர். தமிழ்நாட்டில் முதன்முதலாக Bowling Game கொண்டுவந்தது Snow Bowling என்கிற உதயநிதியின் நிறுவனந்தான்.
அவர் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு முதலில் அந்தத் தொழிலைத்தான் செய்தார். நாங்கள் 2000-ம் ஆண்டில் அங்கு விளையாடச் செல்லும்போது, கல்லாவில் அமர்ந்திருப்பார். வருவோர் போவோருக்கெல்லாம் வணக்கமும் வாழ்த்தும் சொல்வார். சில வாரங்கள் கழித்துதான் எனக்குத் தெரிந்தது இவர் ஸ்டாலின் மகன் என்று. பந்துகளை எடுத்துக்கொடுப்பது, காசு வாங்கிப் போடுவது, snack counter நிர்வகிப்பது என்று பலவித வேலைகளையும் இயல்பாகச் செய்வார்.
சில ஆண்டுகள் கழித்து அவர் கம்ப்யூட்டர் மற்றும் அனிமேஷன் நிறுவனம் இரண்டு நடத்தியபோதும் நான் அந்த நிறுவனத்தோடு சில வேலைகளில் கடந்தேன். அதிலும் சில காலத்துக்குப் பிறகுதான் அது அவரது நிறுவனம் என்று யாரோ சொன்னார்கள். இதிலெல்லாம் அவருக்கு மக்கள்-சமூகத தொடர்பு அனுபவம் நேரடியாகக் கிடைத்தது.
5. உதயநிதிக்கு இன்னொரு வலுவான காரணம் உண்டு. அவர் தனி ஆள் அல்ல; ஒரு கட்சியும், அக்கட்சியின் தலைமையும் அவருக்குப் பெரிய பின்பலம். சிறு வயதிலிருந்தே திராவிடக் கொள்கைகளும், சித்தாந்தங்களும் வீட்டில் விவாதிக்கப்பட்டதிலிருந்து, ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் அங்கமாக இருந்தது இயல்பான அடித்தளத்தைக் கொடுத்திருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவருக்கு ஆலோசனை அறிவுரை சொல்லவும், வழிநடத்தவும் அந்தப் பாரம்பரியக் கட்சி அவர் பின்னே இருக்கிறது. பழுத்த அரசியல்வாதிகள் சுற்றிலும் இருக்கின்றனர். அவர் திகைக்கவோ திணறவோ அவசியமில்லை.
பிராமணர் குடும்பத்தில் எல்லாருக்கும் குறைந்தபட்ச கர்நாடக சங்கீத அறிவு இருப்பது போன்றுதான். திரைப்படக் குடும்பத்தில் திரைப்படத் துறை அறிவு இருப்பது போன்றுதான். எதுவும் கற்றுக்கொடுக்காமலே என் பிள்ளைகள் மூவரும் பாடுவதும், இசைக்கருவிகள் வாசிப்பதும் போன்றுதான். இது ஒரு கோணம். அடுத்த கோணத்தை அடுத்தப் பகுதியில் சொல்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.