29 திரை விமர்சனம்

29 திரை விமர்சனம்

லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ரத்ன குமார் இயக்கி வெளியாகியுள்ள 29 திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம் வாங்க.

 

கதைக்களம்

2010-யில் சேலத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வருகிறார் சத்யா (விது). விவசாயப் படிப்பு முடித்தாலும் கம்பியூட்டரில் பணியாற்றும் வேலைக்கு சேர்கிறார். தனக்காக அடையாளம் என்ன என்ற கேள்வி அவருக்குள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்க, ஒருநாள் அவரது கம்பெனியில் வேலைக்கு சேரும் விஜி என்கிற விஜயலட்சுமியுடன் நட்பாகிறார் சத்யா.

விஜிக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆனால் அவளை காதலிப்பது மட்டுமே தனது வேலை என்று இருக்கிறார் சத்யா. இருவரும் காதலில் திளைக்க உனக்கு என்ன லட்சியம் இருக்கிறது என்று சத்யாவிடம் கேட்கிறார் விஜி.

அந்த கேள்வி வாக்குவாதம் ஆக மாற, மற்றொரு நாள் விஜியை பிரிய வேண்டிய சூழல் சத்யாவிற்கு உருவாகிறது. அதன் பின்னர் இருவரும் தங்களது லட்சியத்தை நோக்கி தனியாக பயணிக்க இறுதியில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்ன குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 2010களில் இருந்த வாழ்க்கையை அழகாக கண்முன் நிறுத்தும் அளவிற்கு நேர்த்தியாக காட்டியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இளைஞர்களின் வாழ்கை எப்படி இருந்தது என்பதை காட்டிய இயக்குநர், இயற்கை சார்ந்த ஒரு பிரச்சனையையும் பேசியிருக்கிறார்.

பழைய திரைக்கதை பாணியில் படம் நகர்வதால் முதல் பாதியில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுகிறது. ஆனால் இதுபோன்ற ஸ்லோ ஸ்கிரீன்பிளேவை பார்த்து பழகியவர்களுக்கு அது ஒரு குறையாக தெரியாது.

அதே சமயம் Gen Z கிட்ஸ் எந்த அளவிற்கு இதனை கனெக்ட் செய்து கொள்வார்கள் என்பதில் சந்தேகமே. முதல் பாதியில் ஹீரோ பெரும்பாலும் மைண்ட் வாய்ஸில் பேசுகிறார். அது சற்று எரிச்சலூட்டினாலும் இயக்குநர் அதை வைத்தே ஒரு சீன் வைத்தது நல்ல முயற்சி.

 

காதல் படமாக ஆரம்பித்து இரண்டாம் பாதியில் வேறொரு டிராக்கில் படம் செல்கிறது. அதற்கான லீடை இயக்குநர் ஆரம்பத்திலேயே கொடுத்திருந்தாலும், இது காதல் படம் என்று நம்பி வந்தவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும்.

நடிகர்களை பொறுத்தவரை ஹீரோ விது பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார். ரெட்ரோ படத்தில் வில்லனிசம் காட்டியவரா இவர் என்று ஆச்சரியப்படவும் வைக்கிறார். ப்ரீத்தி அஸ்ராணி அழகான நடிப்பை தந்துள்ளார். விஜி கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

அதேபோல் மாஸ்டர் மகேந்திரன் நெகடிவ் ஆக அறிமுகமாகி மிரட்டியிருக்கிறார். அவரது கதாபாத்திரத்தின் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான். பிற நடிகர், நடிகைகளும் நல்ல நடிப்பை தந்துள்ளனர். டெக்னிக்கல் ஆக படம் அசத்தலாக உள்ளது; அதற்கு ஷான் ரோல்டனின் பின்னணி இசை பெரிது உதவியுள்ளது.

க்ளாப்ஸ்

நடிகர்களின் பங்களிப்பு காதல் காட்சிகள் மற்றும் வசனங்கள் டெக்னிக்கல் மேக்கிங்

பல்ப்ஸ்

பழைய பாணி திரைக்கதை பொறுமையை சோதிப்பது இரண்டாம் பாதியில் கதை மாறுவது

மொத்தத்தில் இந்த 29 திரைப்படம் 90s, 80s கிட்ஸ்களுக்கானது.

ரேட்டிங்: 2.5 

LATEST News

Trending News

HOT GALLERIES