ரஜினிகாந்த்தின் சுயசரிதை.. புத்தகமாக மட்டும் இல்லாமல் சினிமாவாகவும் வருதாம்.. தரமான சம்பவம்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான கூலி திரைப்படம் தோல்வியடைய; அந்தத் தோல்வியை சரிக்கட்டியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்திருக்கிறார். அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அவரது சுயசரிதை குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.
ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்திருக்கிறார். இப்படமானது அக்டோபர் மாதம் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கு அடுத்ததாக தர்மன்,கமல்ஹாசனுடன் நெசல்ன் இயக்கத்தில் நடிக்கும் படம் வரவிருக்கின்றன.கண்டிப்பாக இம்மூன்று படங்களும் அவருக்கு இன்பத்தையே கொடுக்கும் என நம்பலாம். ரஜினி தன் திரை வாழ்க்கையில் ஏகப்பட்ட அனுபவங்களை சந்தித்திருக்கிறார். வெற்றிகள், தோல்விகள் என மாறி மாறி அவருக்கு வந்திருக்கின்றன.

ரஜினியின் ஃபார்முலா: முக்கியமாக ஒரு படத்தை தோல்வி படமாக கொடுத்துவிட்டால் இனி ரஜினி அவ்வளவுதான் என அவரை விரும்பாதவர்கள் சொல்வார்கள். அந்தப் பேச்சை கேட்டெல்லாம் அப்செட் ஆகாமல்; அடுத்த படத்திலேயே தரமான கம்பேக்கை கொடுத்து அப்படி பேசியவர்களின் வாயை அடைக்க செய்துவிடுவார். இதைத்தான் அவர் கடந்த பல வருடங்களாக செய்துவருகிறார்.
ரஜினி சொன்னது: இதற்கிடையே இத்தனை வருட திரையுலக அனுபவத்தில் அவர் சுயசரிதை நூலை எழுத வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துவந்தார்கள். அவரது குருநாதர் கே.பாலசந்தர்கூட ஒரு நிகழ்ச்சியில், 'நீ சுயசரிதை எழுதுவாயா?' என கேட்டதற்கு; 'இல்லை நான் எழுத மாட்டேன். சுயசரிதையில் உண்மைகளை மட்டும்தான் எழுத வேண்டும்' என பதிலளித்திருந்தார். எனவே சூப்பர் ஸ்டார் சுயசரிதை எழுதமாட்டார் என்றே ரசிகர்கள் கருதி வந்தார்கள்.
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்: ஆனால் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா சமீபத்திய ஒரு பேட்டியின்போது, "அப்பாவின் 50ஆவது ஆண்டு கொண்டாட்டத்துக்காகத்தான் படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்தோம். ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் அதை ஒரு விழாவாக ஏன் கொண்டாட எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. இன்னொரு விஷயம் அப்பா இப்போது அவருடைய சுயசரிதையை எழுதும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவரது வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக உலக அளவில் சென்சேஷனல் ஆகும்" என குறிப்பிட்டிருந்தார்.
புதிய தகவல்: இந்நிலையில் அவரது சுயசரிதை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த நூலில், 'ரஜினியின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், உணர்வுப்பூர்வமான விஷயங்கள் எல்லாம் இடம் பெற்றிருக்குமாம். மேலும் இதனையே திரைப்படமாக்கினால் எப்படி இருக்கும் என்று தன் நெருங்கிய வட்டாரத்திடம் விசாரித்துவருகிறாராம். அவர்களும் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும் என உற்சாகம் கொடுக்க; அந்த யோசனையில் இப்போது சூப்பர் ஸ்டார் தீவிரமாக இருக்கிறாராம்.
உச்சக்கட்ட மகிழ்ச்சி: ரஜினியின் ரசிகர்களுக்கு இந்தத் தகவல் உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. சுயசரிதை எழுதுவாரா என சந்தேகம் இருந்த சூழலில்; இப்போது படமாக உருவாக்கும் திட்டத்திலும் அவர் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதேசமயம் அவர் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்கினால் ரஜினியாக நடிக்க யார் இருக்கிறார் என்ற தேடலிலும் ஈடுபட தொடங்கியிருக்கிறார்கள்.