டெய்லி போலீசுக்கு 500.. கவுன்சிலருக்கு 500 கப்பம் கட்டணும்.. விஜய் ஆட்சியில் இல்லை.. ரவிமரியா பேச்சு!

டெய்லி போலீசுக்கு 500.. கவுன்சிலருக்கு 500 கப்பம் கட்டணும்.. விஜய் ஆட்சியில் இல்லை.. ரவிமரியா பேச்சு!

சென்னை: பிஆர்ஓ யூனியன் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வெற்றிப்பெற்றவர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடந்த இந்த விழாவில் நடிகரும் இயக்குநருமான ரவிமரியா மேடை ஏறி பேசும் போது போலீஸ்காரர்கள் இந்த ஆட்சியில் லஞ்சம் வாங்குவதில்லை என பேசியுள்ளார்.

விஜய் நடித்த குஷி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் ரவி மரியா. அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான ஆசை ஆசையாய் படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார். பல படங்களில் வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அஜித் நடித்த ஆழ்வார் படத்துக்கு வசனம் எழுதிய ரவிமரியா கடைசியாக நட்டி நட்ராஜ் நடித்த மிளகா படத்தையும் இயக்கி உள்ளார்.

போலீசுக்கு 500.. கவுன்சிலருக்கு 500: பிஆர்ஓ யூனியன் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது. அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்களும் பங்கேற்றனர். அப்போது மேடையேறி பேசிய ரவி மரியா தனக்கு தெரிந்த சாலையோர வியாபாரி ஒருவர் இப்போ சந்தோஷமாக இருக்கிறார் என்றும் போன ஆட்சியில் டெய்லி போலீசுக்கு 500 ரூபாயும், அந்த ஏரியா கவுன்சிலருக்கு 500 ரூபாயும் என ஒரு நாளைக்கு 1000 ரூபாய் என மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை கப்பம் கட்டி வந்தேன். ஆனால், இப்போ விஜய் ஆட்சியில் அந்த தொல்லை இல்லாத நிலையில், நிம்மதியாக இருக்கேன் என்றார். பல இடங்களில் ஊழல் குறைந்து விட்டதை கண்கூடாக பார்க்கிறேன், ரொம்ப சந்தோஷமாக இருக்கு, திரைத்துறையில் நம்முடன் நட்பாக இருந்த ஒருவர் இன்று தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக மாறியிருப்பது ரொம்ப சந்தோஷம் என்றார்.

ஒரே ஒரு கோரிக்கை: கல்வி அமைச்சராகவும் திரைத்துறை அமைச்சராகவும் உள்ள ராஜ்மோகனிடம் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைக்கிறேன். 5 வருஷம், 9 வருஷம் என அரசு விருதுகளை சேர்த்துக் கொடுக்காமல் அந்த அந்த வருஷத்துக்கான விருதுகளை வருடம் முடிந்த உடனே கொடுத்தால் நல்லா இருக்கும். அரசு விருதுகள் பல ஆண்டுகளுக்கு சேர்த்துக் கொடுக்கும் போது அந்த படங்களில் நடித்தவர்கள் உயிரிழந்தும் போய் விடுகின்றனர். அந்த படங்களில் நடித்ததும் மறந்தே போய் விடுகிறது. அதை மட்டும் நீங்க செய்யுங்க. இந்த ஆட்சியில் திரைத்துறை செழிக்கவில்லை என்றால் எந்த ஆட்சியிலும் இனி செழிக்காது என்றும் பேசினார்.

LATEST News

Trending News