எல்லாருக்கும் தெரிஞ்சவன் தலைவராகுறது தான் இந்த காலம்.. ப்ளடி பாலிடிக்ஸ் டீசர் எப்படி இருக்கு?
சென்னை: "எல்லாம் தெரிஞ்சவன் தலைவன் ஆகுறது அந்தக் காலம்.. எல்லாருக்கும் தெரிஞ்சவன் தலைவராகுறது தான் இந்த காலம்" என்கிற வசனங்கள் அடங்கிய 'ப்ளடி பாலிடிக்ஸ்' டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் தனது பெயரை கெளதம் ராம் கார்த்திக் என்று மாற்றிக் கொண்டார். சிம்புவுடன் நடித்த பத்து தல படமே துரந்தர் அளவுக்கு ஓடும் என்று எதிர்பார்த்தால், அந்த படம் கன்னடத்தில் வெளியான மஃப்டி படம் அளவுக்கு கூட ஓடவில்லை.
ஆர்யாவுக்கு வில்லனாக மிஸ்டர் எக்ஸ் படத்தில் டபுள் ஏஜென்ட்டாக நடித்து பார்த்தார். அந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில், நாமும் அரசியல் கதையை தொட்டு வெற்றியை பெற வேண்டும் என சீரியஸான முயற்சியில் களமிறங்கி உள்ளார்.
ப்ளடி பாலிடிக்ஸ் டீசர் ரிலீஸ்: இயக்குநர் தீனா ராகவன் இயக்கத்தில் கெளதம் ராம் கார்த்திக், செல்வராகவன், பி. வாசு, அஞ்சனா நேத்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ப்ளடி பாலிடிக்ஸ் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. சந்திரமுகி படத்தை இயக்கிய பி. வாசு செக்யூரிட்டி கதாபாத்திரத்தில் நடித்ததை பார்த்தே ஷாக் ஆகிவிட்டது. புதுப்பேட்டை படத்தை இயக்கிய செல்வராகவன் இந்த படத்தில் அரசியல் தலைவராக மெயின் வில்லனாக நடித்துள்ளார் என்று தெரிகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகியுள்ள ப்ளடி பாலிடிக்ஸ் படத்தின் டீசர் பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் மாறி வரவேண்டும் என்கிற முயற்சியில் இயக்குநர் மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது.
கெளதம் ராம் கார்த்திக் நடிப்பு எப்படி?: முத்துராமலிங்கம் போன்ற படங்களில் நடித்த கெளதம் ராம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் அறிமுகம் ஆனதில் இருந்தே இதுவரை பெரிய வெற்றியை பெறவில்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் அடல்ட் படம் மட்டுமே அவருக்கு சுமாரான வெற்றியை பெற்றுத் தந்தது. பல வருடங்களாக தொடர்ந்து வெற்றிக்காக போராடி வரும் கெளதம் ராம் கார்த்திக் சாதாரண அடிமட்ட தொண்டன் முதல் தலைவனாக மாறும் போராட்டத்திற்காக என்னவெல்லாம் செய்கிற கதையாக ப்ளடி பாலிடிக்ஸ் உருவாகி வருகிறது.
டீசரை பொறுத்தவரையில் கவனம் பெறுகிறது. கெளதம் ராம் கார்த்திக் நடிப்பு வழக்கம் போலவே சிறப்பாக உள்ளது. இயக்குநர் இந்த முறையாவது கெளதம் ராம் கார்த்திக்கு வெற்றியை கொடுத்தால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள்.