சன்னி தியோல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய மருத்துவர்கள் சங்கம்! படத்தை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம்!

சன்னி தியோல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய மருத்துவர்கள் சங்கம்! படத்தை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம்!

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூர்யா – ஆன்ட் சே ஆரம்ப் தக்’ (Suryaa – Ant Se Aarambh Tak) திரைப்படத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எம். பத்மகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், மருத்துவத் துறையில் நடைபெறும் அலட்சியம் மற்றும் முறைகேடுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் விளம்பரக் காட்சிகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அந்தச் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், ஒரு சில மருத்துவர்களின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த மருத்துவத் துறையையும் குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படும் காட்சிகள் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவத் துறையின் நற்பெயரையும் மருத்துவர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்கும் வகையில், படத்தின் உள்ளடக்கத்தை நடுநிலையாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தேவைப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சன்னி தியோலின் இந்தப் படத்தைச் சுற்றி உருவாகியுள்ள சர்ச்சை, அதன் வெளியீட்டுக்கு முன்பே பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News