மூக்குத்தி அம்மன் 2” படம் பார்த்த சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது- நடிகை குஷ்பு...
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் இன்று (நவம்பர் 6) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து நடிகை குஷ்பு தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
முதல் பாகத்தின் வரவேற்பு
கடந்த 2020ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார்.
நட்சத்திரப் பட்டாளம்
இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பில் இணைந்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
படத்தைப் பார்த்த குஷ்பு தெரிவித்த கருத்து
படம் வெளியானதை முன்னிட்டு இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் சென்னை சத்யம் திரையரங்கிற்கு வருகை தந்து படத்தைப் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு,
“மூக்குத்தி அம்மன் 2 படத்தைப் பெண்களும், குழந்தைகளும் விரும்பிப் பார்க்கிறார்கள். சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது. அதுவே எங்களுக்கு பாசிட்டிவான விஷயமாகத் தெரிகிறது.
சுந்தர்.சி படங்களுக்கு குடும்பம் குடும்பமாக வருவார்கள் என்பார்கள். அது இப்போதும் நடந்திருக்கிறது. இதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு நன்றி தெரிவித்த குஷ்பு!
மேலும், அதிகாலை 6 மணி காட்சிக்கு முதல்வர் அனுமதி வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட குஷ்பு, இதற்காக முதல்வருக்கும் அமைச்சர் ராஜ் மோகனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
திரைத்துறையினர் நன்றாக இருக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புவதாகவும், இந்த அறிவிப்பு திரைத்துறையினர் அனைவருக்கும் பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் தொடர்பு இல்லையா?
‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்தவிதமான கதைத்தொடர்பும் இல்லை என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
முதல் பாகத்தில் நடித்த ஊர்வசி மற்றும் நயன்தாரா ஆகிய இருவர் மட்டுமே இரண்டாம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளதாகவும், முதல் படம் ஒரு கதை, இரண்டாம் பாகம் முற்றிலும் வேறொரு கதை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறு ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்