பொங்கல் ரிலீஸுக்கு தயாராகும் 'டிமான்டி காலனி 3'! அதிகாரப்பூர்வ அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'டிமான்டி காலனி 3' திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஹாரர் திரில்லர் திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கல்!
முன்னதாக, இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், படத்தின் இணை தயாரிப்பு மற்றும் ஓடிடி உரிமம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, திரைப்பட வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் நீதிமன்றம் அந்த இடைக்காலத் தடையை ரத்து செய்ததைத் தொடர்ந்து, படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.
பொங்கல் 2027 வெளியீடு!
இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான Passion Studios தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், 'டிமான்டி காலனி 3' திரைப்படம் 2027 பொங்கல் பண்டிகைக்கு உலகளவில் வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளது.
முதல் இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மூன்றாம் பாகத்தின் வெளியீட்டிற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
குறிப்பாக, இரண்டாம் பாகத்தின் இறுதியில் விடை தெரியாமல் விடப்பட்ட மர்மங்களுக்கு மூன்றாம் பாகத்தில் பதில் கிடைக்குமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்!