ஆமா இதெல்லாம் ஒரு ட்யூனா?.. இளையராஜா இப்படியும் அவமானப்பட்டாரா?
இசைஞானி என்று ரசிக்ர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் இப்போது விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கடைசியாக ஜமா படத்துக்கு இசையமைத்திருந்தார். இவை தவிர்த்து வேறு சில படங்களுக்கும் இசையமைக்கிறார்.அவரது வாழ்க்கை வரலாறு படமாவது குறிப்பிடத்தக்கது. அதனை அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுத; தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். இந்தச் சூழலில் இளையராஜா சந்தித்த அவமானம் பற்றி தெரியவந்திருக்கிறது.
தமிழ் திரையிசையில் இளையராஜாவின் பங்கு மிக பெரியது. அவர் வந்து இசையமைத்த பிறகு பாட்டு பாட பாமரனும் வாயை திறந்தான். அன்னக்கிளியில் அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் முத்து ரகத்தில் இருப்பவை. அந்தப் பாடல்களை கேட்ட பிறகு அட இது என்ன ப்பா நம்ம ஊர் இசையால்ல இருக்கு என்று பலரும் ரசிக்க தொடங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு தமிழ் திரையிசையின் முகத்தை பெரிதாக மாற்றிக்காட்டியவர் இளையராஜா மட்டும்தான் என்பது யாராலும் மறக்க முடியாதது.
இளையராஜா முதன்முதலாக அன்னக்கிளியில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். அதற்கு பிறகு இளையராஜாவின் கோட்டையாக தமிழ் சினிமா திகழ்ந்தது. மற்ற இசையமைப்பாளர்கள் அந்த கோட்டைக்குள் நுழைந்தாலும் ராஜாவின் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இளையராஜாவும் தனது ஒவ்வொரு இசையிலும் வெரைட்டி காண்பித்து ரசிகர்களை தனது தளபதியாக வைத்துக்கொண்டார்.
இளையராஜா போல் வேறு எந்த இசையமைப்பாளரும் பிஸியாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருநாளைக்கு கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு இசையமைத்த வரலாறு எல்லாம் உண்டு. பாடல்கள் மட்டுமின்றி ரீ ரெக்கார்டிங்கும் அதில் சேரும். அதேபோல் ஒரு பண்டிகைக்கு இளையராஜா இசையமைத்த படங்கள் மட்டுமே ஏராளம் வந்தது உண்டு. அந்த அளவுக்கு இளையராஜா பிஸியாக இருந்தார்.
இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலின் ட்யூனும் இன்னொரு பாடலுக்கு ரிப்பீட் ஆகாமல் இதுவரை அவர் இசையமைத்துவருவது எட்டாவது அதிசயம் என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இப்படி புகழின் உச்சியில் இருந்தாலும் இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்று ஒருதரப்பினர் கூறுவார்கள். ஆனால் இளையராஜா அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்வதில்லை. சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு சிம்பொனியை எழுதி முடித்திருக்கிறார்.
மேலும் இளையராஜா பற்றி ஒரு பயோபிக்கும் வரவிருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படி உச்சக்கட்ட இடத்தில் இருக்கும் இளையராஜா ஏகப்பட்ட அவமானங்களை தனது ஆரம்பகாலத்தில் சந்தித்திருக்கிறார். அதில் ஒன்றுதான் இப்போது தெரியவந்திருக்கிறது. அதாவது தன்ராஜ் மாஸ்டரிடம் இசையை கற்றுவிட்டு சினிமாவுக்கு இளையராஜா ட்ரை செய்துகொண்டிருந்த காலம் அது. கடந்த 1971ஆம் ஆண்டு நவரச நாயகன் கார்த்திக்கின் அப்பா முத்துராமன் ஹீரோவாக நடிக்க கமிட்டான படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்ததாம். எப்படியாவது இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற முடிவோடு சென்றிருக்கிறார். அப்போது அங்கு படத்தின் தயாரிப்பாளர் இருந்திருக்கிறார். ஏற்கனவே தான் போட்டு வைத்திருந்த சில ட்யூன்களை வாசித்துக்காண்பித்தாராம் ராஜா. அதனை கேட்ட தயாரிப்பாளரோ ஏம்ப்பா இதெல்லாம் ஒரு ட்யூனா. பாட்டு நல்லாவே இல்லை. ஒழுங்கா போயிடு என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து அன்னக்கிளியில் வாய்ப்பு கிடைத்து இன்றுவரை இசை உலகின் அசைக்கமுடியாத ராஜாவாக இருக்கிறார் இளையராஜா.