Clayface: திரை விமர்சனம்
டிசி காமிக்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திரைப்படமான Clayface அதனை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
ஹாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான மேட் ஹேகன் (டாம் ரைஸ் ஹாரிஸ்) அகாடமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தான் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டதை சாதனையாக கருதும் ஹேகன், அந்த மகிழ்ச்சியை கொண்டாட நண்பர் கோரி போவரியுடன் பார்ட்டிக்கு செல்கிறார்.
அங்கே நடிகை மியா டோரஸை சந்திக்கும் ஹேகன் அவர் மீது ஈர்ப்பு கொள்கிறார். அதனை கவனிக்கும் கோரி அந்த நடிகை கேங்ஸ்டர் மர்கோஸின் காதலி என்று கூறி ஹேகனை எச்சரிக்கிறார்.

ஆனாலும், நண்பரின் பேச்சைக் கேட்காமல் ஹேகன் மியாவுடன் உறவுகொள்கிறார். மறுநாள் காலை அவரது படுக்கையறைக்கே வரும் மார்கோஸ் கோபத்தில் ஹேகனின் முகத்தை கத்தியால் சிதைக்கிறார்.
அதன் பின்னர் மார்கோஸ் மீது புகார் அளித்து பலனளிக்காததால் விரக்தியடையும் ஹேகன், தனது தோற்றம் மற்றும் தன் மீதான பொய் குற்றச்சாட்டுகளால் அனைத்து இழக்கிறார். இந்த சமயத்தில்தான் கெய்ட்லின் கோர் என்ற மருத்துவர் குறித்து அறியும் ஹேகன், அவரை சந்தித்து வற்புறுத்தி நானோசெல் சிகிச்சை செய்துகொள்கிறார்.

அதன் பின்னர் முகம் சரியானாலும், அவருக்கு ஏற்படும் திடீர் காயம் சில வினாடிகளில் குணமாவதைப் பார்த்து ஹேகன் அதிர்ச்சியடைகிறார். தனக்கு ஒரு சக்தி கிடைத்திருப்பதாக உணரும் ஹேகன் தனக்கு பிரச்சனை கொடுத்தவர்களை பழிவாங்க கிளம்ப, பின்னர் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
அடுத்தடுத்த தோல்வி படங்களால் துவண்டிருந்த டிசி காமிக்ஸை இந்த Clayface காப்பாற்றியிருக்கிறது என்றே கூறலாம். பாடி ஹாரர் திரில்லர் படமாக மிரட்டலாக இப்படத்தை ஜேம்ஸ் வாட்கின்ஸ் இயக்கியிருக்கிறார்.
மைக் ஃப்லானாகன் மற்றும் ஹொசைன் அமினி இருவரும் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்துள்ளனர். படம் முழுக்க பயமுறுத்தும் வகையிலான பாடி ஹாரர் காட்சிகள் உள்ளன. ஆகையால், கண்டிப்பாக இதயம் பலகீனமானவர்கள், குழந்தைகள் பார்க்கக்கூடிய படம் இதுவல்ல.
பேட்மேனுக்கு வில்லனான Clayface-யின் ஆரிஜின் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஜோக்கர் படத்தில் இருந்தது போல இப்படத்தில் உள்ள எலிவேஷன் காட்சிகள் ஹை மொமென்டை கொடுக்கின்றன.

என்னதான் கதையின் நாயகனான மேட் ஹேகன் பல துன்பங்களுக்கு ஆளானாலும், அவர் நல்லவிதமாக எங்கும் நடந்துகொள்ளாததால் அவர் மீது பரிதாபம் வரவில்லை. இதுபோல் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை அதையெல்லாம் மறக்க செய்கின்றன.
மேட் ஹேகனாக டாம் ரைஸ் ஹாரிஸ் அட்டகாசம் செய்துள்ளார். டிவி ஷோவில் ஒரு வசனத்தை பேச சொல்லும்போது அவர் கொடுக்கும் மாடுலேஷனில் தொடங்கி இறுதிவரை, நடிப்பில் பின்னிப்பெடலெடுத்துள்ளார்.
ஹீரோயினாக வரும் நவோமி ஆக்கி, வில்லனாக வரும் டேவிட் டென்சிக் ஆகியோரும் சிறந்த நடிப்பை தந்துள்ளனர். பறக்கும் விமானத்தில் ஹீரோ செய்யும் ஒரு விஷயம் கண்டிப்பாக நம்மை கண்களை மூடிக்கொள்ள செய்யும்.
டெக்னிக்கலை பொறுத்தவரை ஒளிப்பதிவு மற்றும் இன்னும் சில விஷயங்களில் பி கிரேட் படத்தை போன்றே உருவாக்கியுள்ளனர். என்றாலும் வோல்கர் பேர்ட்ல்மனின் இசை மற்றும் சவுண்ட் மிக்சிங் படத்திற்கு இன்னொரு பலம். ஜோன் ஹாரிஸின் படத்தொகுப்பு சிறப்பு.
க்ளாப்ஸ்
- டாம் ரைஸ் ஹாரிஸின் நடிப்பு
- திரைக்கதை
- பாடி ஹாரர் காட்சிகள்
- சின்ன சின்ன ட்விஸ்ட்
பல்ப்ஸ்
- பி கிரேட் போன்ற மேக்கிங்
- சில லாஜிக் கேள்விகள் பார்க்கும்போதே எழுவது
மொத்தத்தில் இந்த Clayface-ஐ டிசி காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பாடி ஹாரர் விரும்பும் அனைவரும் கொண்டாடலாம். டிசி-க்கு இது ஒரு தரமான காம்பேக்.
