நடிகர்களின் அரசியல் என்ட்ரி; லஞ்சம் ஊழல் குறைந்துள்ளதா? விஜய் ஆண்டனி ஓபன் டாக்

நடிகர்களின் அரசியல் என்ட்ரி; லஞ்சம் ஊழல் குறைந்துள்ளதா? விஜய் ஆண்டனி ஓபன் டாக்

திரைப்படத்தை அதிகாலை 4 மணிக்குக் கூட திரையிடலாம். படம் பிடித்திருந்தால் மக்கள் நிச்சயமாகப் பார்க்க வருவார்கள். மக்களை எதற்காகவும் கட்டுப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ கூடாது.

மனிதர்கள் மாற வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க முடியும் என்று செஞ்சி சிறுமி மாயமான சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள விஜய் ஆண்டனி லஞ்சம், ஊழல் குறைந்துள்ளதா..? அனுபவித்துப் பார்த்த பிறகே தெரியும் என்று அரசியல் குறித்த கேள்விக்கும் பதில் அளித்துள்ளார். 

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் இயக்குநர் மு.மாறன் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கோவை பிராட்வே திரையரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில், ‘அப்பா குட்டி’ திரைப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த உண்மைச் சம்பவம் என்ன என்பது படத்தைப் பார்த்தால் ரசிகர்களுக்குத் தெரியும். தந்தை, மகள் உறவு மற்றும் குடும்பப் பாசத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவதற்கான சூழல் மாறியுள்ளது. 

அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் திரையுலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கோவைக்கு ரயிலில் வந்த அனுபவம் சிறப்பாக இருந்தது. மிகவும் ஜாலியாகத்தான் பயணம் செய்து வந்தேன். திரைப்படத்தை அதிகாலை 4 மணிக்குக் கூட திரையிடலாம். படம் பிடித்திருந்தால் மக்கள் நிச்சயமாகப் பார்க்க வருவார்கள். மக்களை எதற்காகவும் கட்டுப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ கூடாது. அவர்களுடைய விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும்.

செஞ்சியில் சிறுமி காணாமல் போன சம்பவம் குறித்து கேட்கிறீர்கள். அந்தச் சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் காலம் காலமாக நடைபெற்று வருகின்றன. மனிதர்கள் மாறினால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க முடியும். நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கவும், அவர்களுடன் இணைந்து செயல்படவும் விரும்புவதன் காரணமாகவே சிலர் அரசியல் இயக்கங்களைத் தொடங்குகின்றனர்.

தற்போது திரைப்படங்களுக்கான பட்ஜெட் குறைவாக இருப்பதால், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற கதாபாத்திரங்கள் செய்யும் சாகசங்களையும் தமிழ் ஹீரோக்களே செய்ய வேண்டிய சூழல் உள்ளது. எந்த ஆட்சி வந்தாலும் அது மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றங்களைக் கொண்டுவர முடியும். ஒரு ஆட்சிக்கு வாய்ப்பளித்துப் பார்க்க வேண்டும். லஞ்சம், ஊழல் குறைந்துள்ளதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நேரடியாக அனுபவித்துப் பார்த்த பிறகுதான் உண்மையில் குறைந்துள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், குடும்ப உறவுகள் குறித்துப் பேசும்போது, அப்பாவின் பங்களிப்பும் குடும்பத்தில் மிகவும் முக்கியமானது. அப்பாவின் பங்களிப்பால்தான் அம்மா குழந்தைகளை வளர்க்கிறார் என்ற கருத்தையும் தெரிவித்தார். இவ்வாறு விஜய் ஆண்டனி செய்தியாளர்களிடம் பேசினார். இந்தச் சந்திப்பில் ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் இயக்குநர் மு. மாறன் மற்றும் படக்குழுவினர் உடனிருந்தனர்.

LATEST News

Trending News