விவாகரத்துக்குப் பிறகு புதிய பயணம்... குறுக்குவழிகள் வேண்டாம், எனக்காக இதைச் செய்கிறேன்! மனம் திறந்த பாடகி சைந்தவி!
பிரபல பின்னணிப் பாடகி சைந்தவி, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு உடல்நலம் மற்றும் சுய முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புதிய பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் கடந்த 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது. 11 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பிரிவதாக 2024ஆம் ஆண்டு அறிவித்தனர். தொடர்ந்து 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்தது.
இந்த நிலையில், சைந்தவி தற்போது தனது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகள் மற்றும் குழந்தைப் பிறப்புக்குப் பிறகு அதிகரித்த உடல் எடையைக் குறைப்பதற்காக ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், குறுக்குவழிகள் எதையும் நாடாமல், ஒரே நாளில் உடலில் மாற்றத்தை எதிர்பார்க்காமல் தினமும் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது முயற்சிக்கான பலன்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பயணம் வெறும் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சி மட்டுமல்ல; ஒழுக்கம், பொறுமை மற்றும் விடாமுயற்சியைக் கற்றுக்கொள்ளும் பயணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, "நான் இதை எனக்காக, என்னால், நான் உருவாக விரும்பும் புதிய நபருக்காகச் செய்கிறேன்" என்ற அவரது கருத்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
தனது உடற்பயிற்சிப் பயணத்தில் வழிகாட்டி வரும் பயிற்சியாளருக்கும் சைந்தவி நன்றி தெரிவித்துள்ளார்.
விவாகரத்துக்குப் பிறகு தனது வாழ்க்கையைப் புதிய இலக்குகளுடன் முன்னெடுத்துச் செல்லும் சைந்தவியின் இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அவரது இந்தப் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.