Demonte Colony 3: டிமான்டி காலனி 3 ரிலீஸ் தேதி சொல்லியாச்சு.. ஹாரர் பட ரசிகர்களே ஒரு சரவெடி விருந்து ரெடி!

Demonte Colony 3: டிமான்டி காலனி 3 ரிலீஸ் தேதி சொல்லியாச்சு.. ஹாரர் பட ரசிகர்களே ஒரு சரவெடி விருந்து ரெடி!

சென்னை: தமிழ் சினிமாவில் திகில் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் அருள்நிதியின் மிக முக்கியமான படங்களில் ஒன்று 'டிமான்டி காலனி'. கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், அமானுஷ்யமான திரைக்கதை, பரபரப்பான காட்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் தொடர்ச்சியாக வெளியான 'டிமான்டி காலனி 2' படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த நிலையில், தற்போது 'டிமான்டி காலனி 3' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'டிமான்டி காலனி' திரைப்படம் வெளியான போதே, தமிழ் சினிமாவின் சிறந்த ஹாரர் த்ரில்லர் படங்களில் ஒன்றாக பாராட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான இரண்டாம் பாகமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது. குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சியில் மூன்றாம் பாகத்திற்கான முக்கியமான லீட் கொடுக்கப்பட்டிருந்ததால், அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வந்தது.

இந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புக்கு பதில் அளிக்கும் வகையில் 'டிமான்டி காலனி 3' திரைப்படம் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'The End Is Too Far' என்ற டேக் லைனுடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Demonte Colony 3 Release Date Announced A Horror Feast Awaits Fans This September 11

இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதி மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள நிலையில், சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தனது பின்னணி இசையால் முந்தைய இரண்டு பாகங்களிலும் ரசிகர்களை மிரட்டிய சாம் சி.எஸ், இந்த முறையும் இன்னும் வலுவான இசை அனுபவத்தை வழங்கியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


மேலும், ஹாரர் மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்கள் நிறைந்த இந்த மூன்றாவது பாகம், முந்தைய படங்களை விட இன்னும் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜான் டிமான்டி தொடர்பான மர்மங்களுக்கும், பல ஆண்டுகளாக ரசிகர்கள் எழுப்பி வந்த சில கேள்விகளுக்கும் இந்தப் படத்தில் பதில் கிடைக்கலாம் என்ற தகவலும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் சமீப காலமாக பல பெரிய படங்களின் ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டு வந்ததால், 'டிமான்டி காலனி 3' படமும் தள்ளிப்போகுமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. தற்போது படக்குழுவே செப்டம்பர் 11 ரிலீஸை உறுதி செய்திருப்பதால், அந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். "செப்டம்பர் 11-க்காக இப்போதே வெயிட்டிங்", "ஜான் டிமான்டி மீண்டும் திரும்ப வர்றாரு", "இந்த முறை தியேட்டரே அதிரப் போகுது" என பலரும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ஹாரர் பட ரசிகர்கள் இந்த அறிவிப்பை மிகப்பெரிய அப்டேட்டாக பார்க்கின்றனர்.

எது எப்படியோ... கடந்த இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, 'டிமான்டி காலனி 3' படத்தின் மீதும் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை படக்குழு பூர்த்தி செய்யுமா என்பது செப்டம்பர் 11ஆம் தேதி தெரிந்துவிடும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு, கோலிவுட்டில் மீண்டும் 'டிமான்டி காலனி' பேச்சை தொடங்க வைத்துள்ளது என்பது மட்டும் உறுதி.

LATEST News

Trending News

HOT GALLERIES