பூஜா ஹெக்டேவுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சா? ரைட்டு.. டும் டும் டும் எப்போனு சொல்லுங்க மேடம்
சென்னை: தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் அதிகம் தேடப்பட்ட கதாநாயகிகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து முன்னணி ஹீரோக்களின் முதல் தேர்வாக வலம் வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக படங்களை விட தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகளால் அதிகம் பேசப்பட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவரது திருமணம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய பூஜா ஹெக்டே, 2012-ம் ஆண்டு வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், தெலுங்கு சினிமா அவருக்கு பெரிய கதவுகளைத் திறந்தது. ஆரம்பத்தில் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், "ராசி இல்லாத நடிகை" என்ற விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார்.
ஆனால் அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த படம் 'டிஜே: துவ்வாட ஜெகன்னாதம்'. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த அந்தப் படம் வெற்றி பெற்றதோடு, "புட்ட பொம்மா" என்ற பெயரையும் பூஜா ஹெக்டேவுக்கு பெற்றுத் தந்தது. அதன் பிறகு ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ் பாபு, பிரபாஸ், ராம் சரண், சிரஞ்சீவி என தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து நடித்தார்.

'அலா வைகுந்தபுரமுலோ', 'அரவிந்த சமேத', 'மகரிஷி' போன்ற வெற்றிப் படங்கள் அவரை தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக மாற்றின. அதோடு, 'ரங்கஸ்தலம்' படத்தில் இடம்பெற்ற 'ஜிகேலு ராணி' பாடலுக்கு அவர் ஆடிய நடனமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டிய பூஜா ஹெக்டே, அதன் பிறகு பாலிவுட் மற்றும் தமிழிலும் கவனம் செலுத்தினார். ஹிருத்திக் ரோஷனுடன் 'மொஹெஞ்சோதாரோ', பிரபாஸுடன் 'ராதே ஷ்யாம்', சிரஞ்சீவியுடன் 'ஆச்சார்யா', விஜய்யுடன் 'பீஸ்ட், ஜன நாயகன்', சல்மான் கானுடன் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இருப்பினும், சமீபத்தில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், மீண்டும் தென்னிந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ஒரு புதிய படத்திலும், தமிழில் ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர, மீண்டும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படியிருக்க, தற்போது பூஜா ஹெக்டேவின் திருமணம் குறித்த தகவல்தான் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா வட்டாரங்களில் பரவி வரும் தகவலின்படி, அவரது குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு பூஜா ஹெக்டே சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இது காதல் திருமணம் அல்ல, குடும்பத்தினர் முன்னெடுக்கும் திருமணம் என்றும் பேசப்படுகிறது.
மணமகன் சினிமா துறையைச் சேர்ந்தவரா அல்லது தொழிலதிபரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேபோல், திருமணம் எப்போது நடைபெறும் என்பதையும் நெருங்கிய வட்டாரங்கள் ரகசியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல்களில் எதற்கும் இதுவரை நடிகை பூஜா ஹெக்டே தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரியவரும்.