ஹீரோயிசமே வேண்டாம்.. ஜிவி பிரகாஷிடம் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட அஜித்.. ஏகே செம தெளிவு
சென்னை: அஜித் நடிப்பில் கடந்த வருடத்தில் வெளியான இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. குட் பேட் அக்லி 100 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்பட்டாலும்; அனைத்து தரப்பு ரசிகர்களையும் படம் திருப்திப்படுத்தவில்லை. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர்டெவில் படத்தில் நடிக்கிறார். அதனை அவரும், ஷாலினியும் தயாரிக்கிறார்கள். இதற்கிடையே அவருடைய ரேஸிங் தொடர்பாக கிளாடியேட்டர்ஸ் என்ற ஆவண படமும் வரவிருக்கிறது.
விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். அஜித்தோ சினிமாக்களில் நடிப்பதை குறைத்திருக்கிறார். அவரது கவனம் இப்போது பெரும்பாலும் ரேஸிங் பக்கமே இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஏகே ரேஸிங் என்கிற பெயரில் டீம் ஒன்றை ஆரம்பித்து உலக நாடுகளுக்கு சென்று பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றியும் பெறுகிறார். அது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும்; நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஏகேவும் அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

அடுத்த படம்: அந்தவகையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர்டெவில் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். முதலில் இப்படத்தை தயாரிப்பதற்கு ஆட்களே முன்வரவில்லை. ஏகேவின் மார்க்கெட்டுக்கும், அவர் கேட்கும் சம்பளத்துக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பதால்தான் இப்படி நிலைமை ஆகிவிட்டதாக விவரமறிந்தவர்கள் சொன்னார்கள். உடனடியாக ரூட்டை மாற்றிய அஜித் தன் மனைவி ஷாலினியுடன் சேர்ந்து அப்படத்தை தயாரிப்பதற்கு களத்தில் குதித்துவிட்டார்.
கிளாடியேட்டர்ஸ்: இதற்கிடையே கார் ரேஸ் தொடர்பாகவும் அடுத்தக்கட்ட முயற்சிகளை செய்யும் வேலைகளிலும் இறங்கினார். அதன்படி அவர் பங்கேற்ற கார் ரேஸ் தொடர்பாக ஆவண படம் ஒன்றையும் எடுத்திருக்கிறார்கள். அதற்கு கிளாடியேட்டர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 90 நிமிடங்கள் அந்த ஆவண படம் ஓடக்கூடியது. இந்த மாதத்துக்குள் அப்படம் வரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
சூப்பர் கூட்டணி: ஏற்கனவே அஜித் - ஏ.எல்.விஜய் கூட்டணியில் கிரீடம் படம் வந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு வந்த அந்தப் படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றிருந்தாலும்; அஜித்தின் கரியரில் அந்தப் படம் வித்தியாசமாகவே அமைந்திருந்தது. ஆக்ஷன் ஹீரோவாக சென்றுகொண்டிருந்த அவரை; ஃபேமிலி ஆடியன்ஸ் பக்கமும் அந்தப் படம் திருப்பிவிட்டது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். விஜய்யின் ஒர்க்கிங் ஸ்டைல் பிடித்ததால்தான் இந்த ஆவண படத்தை இயக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்திருக்கிறார் அஜித்.
ஜிவி பிரகாஷ் சொன்னது: ஜிவி பிரகாஷும் அஜித்தின் கிரீடம், குட் பேட் அக்லி ஆகிய படங்களுக்கு ஏற்கனவே இசையமைத்திருந்தார். இந்நிலையில் கிளாடியேட்டர்ஸ் படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஜிவி, "அஜித்துடன் நான் ஒரு படம் செய்கிறேன். அது ரேஸிங் தொடர்பான ஆவண படம். சர்வதேச அளவுக்கு சென்றிருக்கிறோம். அந்தப் படத்துக்காக ஃபேன் பாய் இசையை கொஞ்சம் கொடுத்திருந்தேன். ஆனால் அஜித்தோ, இல்லை ஜிவி ஹீரோயிசமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்" என்றார்.