வாட்டர் மெலன் திவாகருக்கு சேரன் கொடுத்த பதிலடி – “என்னைத் தொலைக்கத் தயாராக இல்லை; கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது!”

வாட்டர் மெலன் திவாகருக்கு சேரன் கொடுத்த பதிலடி – “என்னைத் தொலைக்கத் தயாராக இல்லை; கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது!”

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், சமூக வலைத்தளங்களில் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என அறியப்படும் திவாகர் தொடர்பான சர்ச்சைக்கு தற்போது விளக்கமளித்துள்ளார்.

ஜெயா தொலைக்காட்சியில் சேரன் தொகுத்து வழங்கும் ‘யார் சரி’ நிகழ்ச்சியில் திவாகர் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி கணேசனுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசிய திவாகருக்கு சேரன் அறிவுரை வழங்கியிருந்தார்.

ஒருவருடைய திறமையையும் தகுதியையும் முதலில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அதன் பின்னரே மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டும் என்றும் சேரன் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் அதிருப்தியடைந்த திவாகர், சேரன் தன்னை நிகழ்ச்சியில் அவமதித்துவிட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டார். மேலும், சேரனுக்கு எதிராகத் தனது ரசிகர் மன்றம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்த சேரன், நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தின் ஒளிபரப்பப்படாத முழுமையான காணொளியையும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் வெளியிட்டுள்ள விளக்கப் பதிவில், திவாகரின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டே நிகழ்ச்சியின் குறிப்பிட்ட பகுதியை ஒளிபரப்பாமல் தவிர்த்ததாகவும், முடிந்தவரை அமைதியாகவும் பொறுமையாகவும் நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், திவாகரை நிகழ்ச்சியில் அனுமதித்ததற்கும், அனுமதிக்காமல் வெளியேற்றியிருந்தாலும் விமர்சனங்கள் எழுந்திருக்கும் எனக் குறிப்பிட்ட சேரன், அங்கு தான் நடந்துகொண்ட விதம் மனிதாபிமானமும் கண்டிப்பும் கலந்த அணுகுமுறை எனத் தெரிவித்துள்ளார்.

“மரியாதை என்பது நான் காப்பாற்றும் என் பெயரில் இல்லை; என் நடத்தையில் இருக்கிறது என்பதை நன்றாக அறிவேன். மற்றவர்கள் பார்வையில் எனது அணுகுமுறை புரியவில்லை என்பதற்காக என்னை நான் தொலைக்கத் தயாராக இல்லை” என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சேரனின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருவதுடன், சேரன் - திவாகர் இடையிலான விவாதமும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

LATEST News

Trending News