பராசக்தி பிரீமியர் ரத்து SKவுக்கு வந்த சோதனை..! "புரட்சி இல்லை...ரிஸ்க்", காரணம் என்ன தெரியுமா?
நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் "ஜனநாயகன்" ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்காததால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐரோப்பா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் திட்டமிடப்பட்ட சிறப்புக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. பிரான்சில் நடைபெறவிருந்த பிரீமியர் ஷோவும் தள்ளிவைக்கப்பட்டது.
படத்தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் ஜனநாயகன் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுகிறது.
புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள "பராசக்தி" படத்தின் பிரான்ச் பிரீமியர் காட்சி ரத்து செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
95 இருக்கைகள் கொண்ட ஹாலில் வெறும் 16 டிக்கெட்டுகளே முன்பதிவு ஆகியதால் காட்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் பெரும் விவாதம் எழுந்த நிலையில், படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தர் ஃப்ரைடே என்டர்டெயின்மெண்ட் இதை முற்றிலும் பொய்யான தகவல் என மறுத்துள்ளது.
"பராசக்தி படத்தின் பிரீமியர் காட்சி தொடர்பான தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது போலியான செய்தி. சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என விநியோகஸ்தர் அறிவித்துள்ளார். படம் பிரான்சில் 65 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராசக்தி படம் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிரெய்லர் 50 மில்லியன் பார்வைகளைத் தாண்டிய நிலையில், படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜனநாயகன் ஒத்திவைப்பால் பொங்கல் ரிலீஸ்களில் பராசக்தி தனித்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரு படங்களும் அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.