போட்ரா வெடிய.. தேர்தலுக்கு அடுத்த நாளே ‘ஜனநாயகன்‘ ரிலீஸா?..விஜய் ரசிகர்கள் குஷி!
சென்னை: எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன்,மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ளனர்.
தளபதி விஜய்: தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இனி எனக்கு எல்லாமே அரசியல் என முடிவு செய்து இருக்கும் விஜய், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர்,திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். நேற்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், தான் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அடுத்ததாக ஏப்ரல் 2ந் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

ஜனநாயகன் ரிலீஸ் தேதி: இந்நிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் ஏப்ரல் 24ந் தேதி அல்லது ஏப்ரல் 30ந் தேதி வெளியாகும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக இருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் குஷி: நீண்ட போராட்டத்திற்கு பின் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் அனுப்பியது. மறு தணிக்கை குழு மும்பையில் படத்தை பார்த்துவிட்டு சில மாற்றங்களை செய்ய பரிந்தனர். படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள், வசனங்கள் இருப்பதால், தேர்தல் ஆணையம் படத்தை பார்க்க பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஏப்ரல் 23ந் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், ஜனநாயகன் படத்திற்கு நாங்கள் நேரடியாக சென்சார் சான்றிதழ் கொடுக்க முடியாது என்றது. இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு, ஏப்ரல் 24ந் தேதி அல்லது ஏப்ரல் 30ந் தேதி வெளியாகும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.