சாவை கூட விமர்சிப்பீங்களா?.. அம்மாவிற்கு கடவுள் நம்பிக்கை உண்டு.. பிரகாஷ் ராஜ் பதிலடி!
சென்னை: பிரகாஷ் ராஜின் தாய் சுவர்ணலதா ராய் திங்கட்கிழமை (மார்ச் 30ந் தேதி) உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு கிறிஸ்துவ முறைப்படி, பெங்களூருவில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்றது. இதை சிலர் விமர்சனம் செய்து இணையத்தில் வீடியோவை வெளியிட்டு வந்த நிலையில், இதற்கு பிரகாஷ் ராஜ் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
பிரகாஷ் ராஜின் தாய் சுவர்ணலதா ராய் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனையால் உயிரிழந்தார். அவருக்கு வயழது 86. அவரின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 31 ந் தேதி) பெங்களூரில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. இதை சிலர் விமர்சனம் செய்து பிரகாஷ் ராஜ், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, எந்த கடவுளையும் நான் வணங்கமாட்டேன் என்று பேட்டி அளித்த வீடியோ போட்டு, கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு நடந்த வீடியோவையும் போட்டு, தன்னை ஒரு நாத்திகர் என்று சொன்னவர், இன்று தனது தாயாரின் இறுதிச் சடங்குகளை கிறிஸ்தவ மரபுகளின்படி செய்கிறார் பதிவிட்டு இருந்தார்.
பிரகாஷ் ராஜ் பதில்: இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளான நிலையில் இதற்கு பதில் அளித்து இருக்கும் பிரகாஷ் ராஜ், ஆம். நான் கடவுளை நம்புவதில்லை... ஆனால் என் தாய் தன் கடவுளை நம்பினார். தன் நம்பிக்கையின்படியே நல்லடக்கம் செய்யப்படும் உரிமையை அவருக்கு மறுக்க நான் யார்? இதுவே நாம் ஒருவருக்கொருவர் அளித்துக்கொள்ளும் அடிப்படை மரியாதை ஆகும். வெறுப்பைப் பரப்பும் அரக்கர்களாகிய நீங்கள் இதை உணர்வீர்களா? கேட்டுள்ளார்.
முட்டாள்கள்: அதே மட்டுமில்லாமல், பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது தாயார் ஹிரா பென்னையும் கேலி செய்ததாகக் கூறப்படும் ஒரு போலி ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்த பிரகாஷ் ராஜ், அந்த ட்வீட் முற்றிலும் புனையப்பட்டது "ஏப்ரல் ஃபூல்ஸ் தினத்தன்று என் பெயரில் ஒரு போலி ட்வீட்டை உருவாக்கி, தங்கள் சொந்தத் தலைவரையே அவமதிக்கும் மதவெறியர்கள்.. முட்டாள்களே என கடுமையாக சாடி உள்ளர். அதே நேரம், இந்தத் துயரமான நேரத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் மிகவும் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.