வருகிறான் துருவ நட்சத்திரம்.. நீதிமன்றமே தேதி குறிச்சுடுச்சு.. சியான் ரசிகர்களே தயாரா?
சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இதுவரை வெளியாகாமல் உள்ள படம் துருவ நட்சத்திரம். படத்தை கௌதம் வாசுதேவ் மேனனே எழுதி இயக்கி, தயாரித்தும் இருந்தார். அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வந்த கௌதம் வாசுதேவ் மேனன் தனது இயக்கத்தில் மட்டும் இல்லாமல் தயாரிப்பிலும் காலடி எடுத்து வைத்த படம் துருவ நட்சத்திரம். படத்தை எடுத்து பல ஆண்டுகள் ஆகியும் படத்தை ரிலீஸ் செய்வதில் சில நிதி நெருக்கடிகள் ஏற்பட்டது. அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து படத்தை ரிலீஸ் செய்வதற்கு தொடர் முயற்சியில் உள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.
இந்நிலையில் இந்த படத்தை வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் ரிலீஸ் செய்ய நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும் இந்த தேதிக்குள் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றாலும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே இதோ ரிலீஸ் ஆகிறது, அதோ ரிலீஸ் ஆகிறது என்று அறிவிப்புகள் வந்த வண்ணம் தான் இருந்ததே தவிர படம் வெளியாகவில்லை. பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் இந்த படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆக உள்ளது என்று ரசிகர்கள் படத்தின் மீது நம்பிக்கையில் உள்ளனர்.
ஏற்கனவே படம் பார்த்த பலரும் படம் இப்போதும் செம்ம ஃபிரஸ்ஸாக இருப்பதால், படம் எப்போது வெளியானாலும் ஒரு ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்று நம்பிக்கையில் உள்ளனர். இந்த படத்தின் கதையை முதலில் ரஜினிக்குச் சொல்லப்பட்டு, பின்னர் சூர்யா நடிக்க ஓ.கே சொல்லி அதன் பின்னர் விக்ரம் கமிட் ஆனார். சூர்யா தரப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தை தயாரிக்க வேண்டாம் என்று எடுத்துக் கூறியும் அவர் கேட்காததால் சூர்யா படத்தில் இருந்து விலகினார் என்று கூறப்படுகிறது. படம் 2017ஆம் ஆண்டு உருவாகி 2018ஆம் ஆண்டு ரிலீஸ் ஆவதாக இருந்தது. தற்போது கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பின்னர் படம் வெளியாகவுள்ளது.
