Agadha: வனிதா விஜயகுமார் பொண்ணா இப்படி.. பேய் படத்தில் சும்மா மிரட்டிவிட்டாரே ஜோவிகா!
ஹைதராபாத்: இயக்குநர் எம்.எஸ். ராஜுவின் 'அகதா' திரைப்படம் மூலம் மஞ்சுளா, விஜயகுமார் ஆகியோரின் பேத்தியும் வனிதா விஜயகுமாரின் மகளுமான பிக் பாஸ் பிரபலம் ஜோவிகா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். சமீபத்தில், படக்குழுவினர் அவரது முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டனர். அதில், கனமழையில், தீவிரப் பார்வையுடன் ஜோவிகா காட்சியளித்தார். இந்நிலையில், ஜோவிகா விஜயகுமார் நடித்த அகதா படத்தின் பயமுறுத்தும் டீசர் வெளியானது.
தமிழில் பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் ஜோவிகா. மேலும், அந்த படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். அம்மா வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் நடித்த மிசஸ் அண்ட் மிஸ்டர் படத்தை தயாரித்தார். இந்நிலையில், டோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இருண்ட, பழைமையான சூழலில் அவர் காட்சியளிக்க, பின்னணியில் கொட்டும் கனமழை அதற்கு மேலும் மெருகூட்டுகிறது. வலிமையும் மென்மையும் ஒருசேர வெளிப்படும் அவரது கண்கள், அப்பாவித்தனத்தையும், ஒருவித சக்தியையும் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். இந்நிலையில், சற்றுமுன் வெளியான டீசரில் பேய் போல கத்தி அவர் நடித்துள்ள விதம் ரசிகர்களை அட போட வைத்துள்ளது.
இத்திரைப்படம் வனிதா விஜயகுமார் குடும்பத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பைக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், எம்.எஸ். ராஜு, வனிதா விஜயகுமாரை 'தேவி' திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இப்போது, அவரது மகள் ஜோவிகாவை "அகதா" மூலம் அறிமுகப்படுத்துகிறார். ஒரே இயக்குநரால் இரு தலைமுறைகள் இணைவது சினிமாவில் அரிதானதும், உணர்வுபூர்வமானதுமாகும். ஜோவிகா, தனது பாட்டி மஞ்சுளாவின் கலைப் பாரம்பரியத்தையும் தொடர்ந்து எடுத்துச் செல்கிறார்.
'அகதா' ஒரு பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வருகிறது. முன்னதாக வெளியான இப்படத்தின் மற்ற போஸ்டர்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. தெய்வீக சக்தியுடன் கூடிய மகாதேவி, தீப்பந்தம் ஏந்தும் சிம்ஹா (ஸ்ரவண் ரெட்டி) மற்றும் மகிமா (உல்கா குப்தா) போன்றோரின் தோற்றங்கள் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றன.
சினிமா எக்ஸ்பிரஸ் தகவலின்படி, 'அகதா' படப்பிடிப்பு 85 நாட்களில் நிறைவடைந்துள்ளது. இதில் சுமார் 45 நிமிடங்கள் விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பணிகள் சேர்க்கப்படவுள்ளன. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் உருவாகும் இப்படம், விரைவில் திரைக்கு வருகிறது.