Karuppu: சூர்யாவின் கருப்பு ரிலீஸ்.. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் கருப்பு திரைப்படம் மே 14ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும் வகையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 'கருப்பு' திரைப்படத்திற்கு இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ், பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, மே 14ந் தேதி மற்றும் மே 15ந் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் சிறப்புக் காட்சிகள் நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் வரை திரையிடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் கூட்ட நெரிசல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு காட்சி: நீண்ட ஆண்டுகளுக்கு பின் சூர்யா, திரிஷா இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜியின் வித்தியாசமான இயக்கம் போன்ற காரணங்களால் 'கருப்பு' திரைப்படம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி கிடைத்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் பல திரையரங்குகளில் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 'கருப்பு' திரைப்படம் வசூல் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்: 'கருப்பு' படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, அனேகா, மாயா ரவி என பலர் நடித்துள்ளனர். Dream Warrior Pictures தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.