ஜென் ஸிக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.. காதலில் நானா?.. விளக்கம் கொடுத்த மிருணாள் தாகூர்
மும்பை: மராத்தி மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிகையாக பயணத்தை ஆரம்பித்த மிருணாள் தாகூருக்கு தெலுங்கில் சீதாராமம் படம் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்போதிருந்து இப்போது பிஸியான நடிகையாக வலம் வரும் அவர்; கிரிக்கெட் வீரர் ஜெய்ஷ்வாலை காதலிப்பதாக தகவல்கள் பரவின.
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் மிருணாள் தாகூர். சீதாராமம் திரைப்படம்தான் அவரது கரியரையே மாற்றி வைத்தது. அந்தப் படம் ரிலீஸான சமயத்தில் சோஷியல் மீடியா ரிலீஸ்களில் அவர்தான் இருந்தார். இதன் காரணமாக தென்னிந்திய மொழிகளில் அதீத கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கவனம் பாலிவுட்டிலேயே இருக்கிறது. அதன் பலனாக தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.

கடைசி படம் தோல்விதான்: அவர் கடைசியாக நடித்த Hai Jawani Toh Ishq Hona Hai படம் தோல்வியைத்தான் சந்தித்தது. ஆனால் ஹிட்டோ, தோல்வியோ அவரது மார்க்கெட் சீராகவே இருக்கிறது தென்னிந்திய மொழிகளை பொறுத்தவரை அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் ராக்கா படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இப்படமும் அவருக்கு பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காதல் கிசுகிசு: சூழல் இப்படி இருக்க அவரை சுற்றி சமீபமாக காதல் கிசுகிசுக்கள் அதிகம் ஓடுகின்றன. முதலில் நடிகர் தனுஷுக்கும், மிருணாளுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி டேட்டிங் எல்லாம் செல்கிறார்கள் என்று பேசப்பட்டது. மேலும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் மிருணாள். அதுமட்டுமின்றி இந்த விஷயத்தில் தனக்கு அதீதமான விளம்பரம் கிடைத்ததாகவும்; தனுஷுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அவர் மீது காதல் எல்லாம் இல்லை என்றும் போட்டு உடைத்திருந்தார்.
புதிய கிசுகிசு: அதனையடுத்து அனைவரும் சைலெண்ட் ஆனார்கள். அதனைத் தொடர்ந்து மும்பையில் இருக்கும் கஃபே ஒன்றுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யெஷஸ்வி ஜெய்ஸ்வாலும், மிருணாளும் ஒன்றாக சென்றார்கள். அவர்கள் இரண்டு பேரும் டேட்டிங்கில்தான் இருக்கிரார்கள் என்றெல்லாம் பலரும் பேசினார்கள். தற்போது அதுகுறித்தும் அதிரடி விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
மிருணாளின் விளக்கம்: அவர் கொடுத்திருக்கும் விளக்கத்தில், "கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள் ப்ரோ. நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும் இடத்தை காட்டுங்கள். எப்படி இப்படியெல்லாம்? படித்தவர்களாக இருப்பவர்களே வதந்திகளை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள். நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. ஜென் ஸியிடமிருந்து சில விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். சரியான பிரச்னைகள் குறித்து வீடியோக்களை உருவாக்கினாலே அதிகமான வியூஸ்கள் கிடைக்கும்" என்றார்.