Reba Monica: அம்மாவான பிகில் சிங்கப்பெண்.. எவ்வளவு எமோஷனலா போஸ்ட் போட்டு இருக்காங்கனு பாருங்க
சென்னை: தமிழ் சினிமாவில் பிகில் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை ரெபா மோனிகா ஜான், தனது வாழ்க்கையின் மிக அழகான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். திருமண வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருந்த ரெபா, தற்போது பெண் குழந்தைக்கு தாயாகியிருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். குழந்தையின் பெயரையும், முதல் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள அவரது பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஜூலை 22-ம் தேதி பிறந்த தனது மகளுக்கு 'கியாரா ஜோசப்' என்று பெயர் வைத்திருப்பதாக ரெபா தெரிவித்துள்ளார். "Hello World" என்று தொடங்கும் அழகிய நினைவுப் பலகையுடன், கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கடந்த சில நாட்களாக இந்த புதிய வாழ்க்கையை புரிந்துகொண்டு, எங்களின் குட்டி தேவதையுடன் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கடந்த ஒன்பது மாதங்களாக என் உடல் இன்னொரு உயிரை வளர்த்தது என்பது ஒரு அதிசயம். அந்த முழு காலத்திலும் என் குழந்தை எனக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் இருந்தாள். இப்போது அவள் எங்கள் வாழ்க்கைக்குள் வந்துவிட்டாள். இனிமேல் இந்த உலகத்தை எங்கள் பார்வையில் அவளுக்குக் காட்டி, மூவரும் சேர்ந்து அழகான நினைவுகளை உருவாக்க காத்திருக்கிறோம். வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்தில் எங்களுக்கு உங்கள் ஆசீர்வாதம் தேவை" என மிகவும் உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.

ரியாக்ஷன்: ரெபா பகிர்ந்த இந்த பதிவு வெளியாகிய சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளை குவிக்கத் தொடங்கினர். "Congratulations", "Welcome Baby Kiara", "God Bless Your Family" என ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. குழந்தையை கையில் வாஞ்சையோடு தழுவி பிடித்துக் கொண்டு இருக்கும் குடும்ப புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குவியும் வாழ்த்துகள்: மலையாள சினிமாவில் அறிமுகமான ரெபா மோனிகா ஜான், தமிழில் விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் அதிக கவனம் பெற்றார். அதன்பிறகு தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், திருமணத்துக்குப் பிறகும் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். தற்போது தாய்மையின் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள ரெபாவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.