திருமணத்திற்கு முன்பே கணவர் சொன்ன அந்த அதிர்ச்சி யோசனை! இப்போது வெளிப்படையாகப் பேசிய ரம்யா கிருஷ்ணன்!
தமிழ் சினிமாவில் 'படையப்பா' படத்தின் நீலாம்பரி கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 'பாகுபலி' படத்தில் சிவகாமி தேவியாகவும் மிரட்டிய இவர், தற்போது தனது திருமண வாழ்க்கை குறித்துப் பகிர்ந்துள்ள சுவாரசியமான தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சியை கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார்.
சமீபகாலமாக ரம்யா கிருஷ்ணனும் அவரது கணவரும் வெவ்வேறு நகரங்களில் வசித்து வருவதால், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் விவாகரத்து பெறப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில், 'Raw Talks with VK' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரம்யா கிருஷ்ணன், இந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். தாங்கள் இன்னமும் கணவன் மனைவியாகவே இருப்பதாகவும், தொழில் மற்றும் குடும்பச் சூழ்நிலைகள் காரணமாகவே வெவ்வேறு நகரங்களில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மகனின் நலனைக் கருத்தில் கொண்டு அவரை சென்னையில் உள்ள பள்ளியில் சேர்த்ததாகவும், இதனால் தான் சென்னையில் வசிப்பதாகவும், கணவர் கிருஷ்ண வம்சி ஹைதராபாத்தில் தங்கிப் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், திருமணத்திற்கு முன்பே கிருஷ்ண வம்சி தன்னிடம் ஒரு வித்தியாசமான யோசனையை முன்வைத்ததாகவும் ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதாவது, திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் ஒன்றாக வாழலாம் என அவர் கூறியிருந்தாராம். அப்போது அந்த யோசனைக்கு சம்மதித்திருக்க வேண்டும் என தற்போது நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தங்களுக்குள் சண்டைகள் குறைந்து, நல்ல நண்பர்களாக வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரம்யா கிருஷ்ணனின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.