OTT: ரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவதார் 3’ ஓ.டி.டி ரிலீஸ்... எதில்; எப்போது பார்க்கலாம்?
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் உறைய வைத்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு ‘அவதார்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘அவதர்: தி வே ஆஃப் வாட்டர்’ சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது.
அதனை தொடர்ந்து, ‘அவதார்’ படத்தின் 3-ஆம் பாகமான ‘அவதார் : பயர் அண்ட் ஆஷ்’ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த கதையில் புதிய நாவி குலம் ஒன்று அறிமுகமாகிறது.
அவர்கள் தான் மாங்குவான் அல்லது ஆஷ் பீப்புள். எரிமலைப் பிரதேசத்தில் வாழ்ந்த இவர்கள், ஒரு பெரும் வெடிப்பில் தங்கள் ஊரை இழந்தவர்கள். இயற்கையோடு அமைதியாக வாழும் நாவிகள் போல அல்லாமல், கோபமும் வெறுப்பும் இவர்களின் அடையாளமாக இருக்கிறது. இந்த ஆஷ் பீப்புளின் தலைவியாக வரும் வராங் கதாபாத்திரத்தில் ஓனா சாப்லின் நடித்திருக்கிறார். இதுவரை பார்த்த நாவிகள் எல்லாம் நல்லவர்கள், இயற்கையை நேசிப்பவர்கள் என்ற இமேஜை இந்த கேரக்டர் முற்றிலும் உடைக்கிறது.
இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டும் அல்லாமல் உலகளவில் ரூ.8000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூன் 24-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.