உங்க பெயரை சொன்னாலே விசில் சத்தம் தான் தல.. பிறந்த நாள் வாழ்த்து சொன்ன CM விஜய்!

உங்க பெயரை சொன்னாலே விசில் சத்தம் தான் தல.. பிறந்த நாள் வாழ்த்து சொன்ன CM விஜய்!

சென்னை: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வாகவும் மாறியிருப்பவர் மகேந்திர சிங் தோனி. ரசிகர்கள் அன்போடு "கேப்டன் கூல்", "தல" என்று கொண்டாடி வரும் தோனி, இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணிக்காக உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக் கோப்பை என இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத சாதனைகளை படைத்த தோனிக்கு, தமிழ்நாட்டுடன் எப்போதுமே தனி பந்தம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் தொடங்கிய காலம் முதல் மஞ்சள் ஜெர்சியில் களமிறங்கி, சென்னை ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தை பிடித்தவர். அதனால்தான் சிஎஸ்கே ரசிகர்கள் அவரை "தல" என்று கொண்டாடி வருகிறார்கள்.

Tamilnadu CM Vijay s heartfelt birthday message for MS Dhoni

இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியதோடு, சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். பல இடங்களில் தோனியின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் வழங்கியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் தோனி தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

அப்படியிருக்கும் போது, தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்த நாள் வாழ்த்து பதிவு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. தோனியை நேரில் சந்தித்தபோது எடுத்த பழைய புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், மனம் தொடும் வகையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து சொன்ன முதலமைச்சர்: அந்த பதிவில், "உங்கள் பெயர் ஒலிக்கும் ஒவ்வொரு முறையும் மைதானத்தில் எழும் விசில் சத்தமும், நீங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் பதித்திருக்கும் இடமும் தமிழ்நாட்டின் விளையாட்டு உணர்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நமது 'கேப்டன் கூல்' மகேந்திர சிங் தோனிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் அசாதாரண கிரிக்கெட் பயணம், அமைதியான தலைமைத்துவம், எளிமையான குணம் ஆகியவை தொடர்ந்து தலைமுறைகளை ஊக்குவித்து வருகின்றன. நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், இன்னும் பல வெற்றிகளுடனும் வாழ வாழ்த்துகள். உங்களுக்காக ஒலிக்கும் விசில் சத்தம் நாளுக்கு நாள் இன்னும் அதிகரிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்பு: முதலமைச்சர் விஜயின் இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, "உங்க பெயரை சொன்னாலே விசில் சத்தம் தான் தல" என்ற வரியே சிஎஸ்கே ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

அரசியலில் பிஸியாக இருந்தாலும், விளையாட்டு ஜாம்பவான்களின் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியின் 45-வது பிறந்த நாளில், ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் முதலமைச்சரின் வாழ்த்தும் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

LATEST News

Trending News