Toxic: டாக்ஸிக் படத்துக்கு ஒரு கட் கூட சொல்லாத CBFC.. முழுக்க முழுக்க A.. ஒரு அப்ஜக்ஷன் மட்டும்
சென்னை: யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதுவும் படம் முழுக்க வன்முறை காட்சிகள் நிறைந்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தணிக்கை வாரியம் எந்தவொரு காட்சியையும் வெட்டாமல் படத்திற்கு சான்றிதழ் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாகியுள்ளது. கடந்த வாரம் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் வெளியீட்டுக்கான ஒப்புதலை வழங்கியதாக கூறப்படுகிறது.
தணிக்கை சான்றிதழின்படி, 'டாக்ஸிக்' படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 12 நிமிடங்கள் ஆகும். படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு கன்னட வார்த்தைகள் மற்றும் ஒரு சொற்றொடரை ஒலியடக்கம் செய்யவும், அதற்கேற்ப ஆங்கில சப்-டைட்டில்களில் மாற்றங்களை செய்யவும் தணிக்கை வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

அதோடு, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் தொடர்பான சட்டப்பூர்வ எச்சரிக்கை வாசகங்களையும் படத்தில் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், படத்தின் எந்தவொரு காட்சியையும் நீக்க வேண்டும் என்று தணிக்கை வாரியம் உத்தரவிடவில்லை. அதேநேரம், 'டாக்ஸிக்' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
துரந்தர் படத்துடன் ஒப்பிட்டு கேள்வி: 'டாக்ஸிக்' படத்தின் தணிக்கை விவரம் வெளியானதும் சமூக வலைதளங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற்றதாக கூறப்படும் 'துரந்தர்' படத்துடன் 'டாக்ஸிக்' படத்தை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 'துரந்தர்' படத்திற்கு பல்வேறு காட்சிகளில் வெட்டுக்கள் விதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 'டாக்ஸிக்' படத்திற்கு ஒரு காட்சிகூட வெட்டப்படாதது எப்படி என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெண்களை தவறாக சித்தரிக்கிறார்கள்: 'டாக்ஸிக்' படத்தின் நெருக்கமான காட்சிகள் மற்றும் பெண்களை தவறாக சித்தரிப்பதாக கூறப்படும் சில காட்சிகள், வசனங்கள் குறித்தும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இப்படிப்பட்ட சூழலில், தணிக்கை வாரியம் எந்த காட்சியையும் வெட்டாமல் படத்திற்கு சான்றிதழ் வழங்கியிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
![]()
'குழந்தைகள் பார்க்க வேண்டாம்'.. யாஷ் சொன்னது என்ன?: தணிக்கை சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பே 'டாக்ஸிக்' திரைப்படம் குழந்தைகளுக்கான படம் கிடையாது என்பதை யாஷ் தெளிவுபடுத்தியிருந்தார். ஒரு பேட்டியில் பேசிய அவர், குழந்தைகள் இந்தப் படத்தை பார்க்கக்கூடாது என்றும், இது முழுக்க பெரியவர்களுக்கான கதை என்றும் கூறியிருந்தார். அதேபோல், படம் மிகவும் நேர்த்தியான மற்றும் ஆழமான கதையை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால், தற்போது 'டாக்ஸிக்' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்திருப்பது யாஷ் முன்பே கூறியிருந்த கருத்துகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.
யார் யார் நடிச்சிருக்காங்க?: கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள 'டாக்ஸிக்' படத்தில் யாஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யாஷின் வித்தியாசமான தோற்றம், ஆக்ஷன் காட்சிகள், கதைக்களம் என ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது ஒரு கட் கூட இல்லாமல் தணிக்கை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி 'டாக்ஸிக்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் ரசிகர்களை எந்த அளவுக்கு திருப்திப்படுத்தப் போகிறது என்பதுதான் தற்போது பெரும் கேள்வியாக உள்ளது.