ENE Repeat (தெலுங்கு): திரைவிமர்சனம்
Ee Nagaraniki Emaindi திரைபடத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள ENE Repeat தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்குன்னு பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
திரைத்துறையில் சாதிக்க விரும்பிய நான்கு நண்பர்களான விவேக், கார்த்திக், கௌசிக் மற்றும் உப்பி ஆகியோர் சேர்ந்து எடுத்த திரைப்படம் பிளாப் ஆகிறது. அதனால் நான்கு பேரும் தனித்தனியாக பயணிக்கத் தொடங்குகின்றனர்.
திருமண நிகழ்வுகளை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றில் விவேக் சேர்கிறார். கௌசிக் நடிகராகவும், உப்பி படத்தொகுப்பாளராகவும், கார்த்திக் ஒளிப்பதிவாளராகவும் உள்ளனர். அப்பாவுக்கு தெரியாமல் சினிமாவில் வேலை பார்க்கும் கீர்த்தனா, கேமராமேன் கார்த்திக் உடன் நட்பாக பழகுகிறார்.

ஆனால், கார்த்திக்கிற்கு கீர்த்தனா மீது ஒருதலைக் காதல் உள்ளது. அதே சமயம் டாக்டர் முரளிதர் மகள் கீர்த்தனாவிற்கு மாப்பிள்ளை பார்க்கிறார். திருமண வேலைகள் நடக்கின்றன. இந்த சூழலில் மூன்று நண்பர்கள் ஒன்றிணைய, கீர்த்தனாவை தான் காதலிப்பதாக கார்த்திக் நண்பர்களிடம் கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து மது போதையில் மூவர் செய்யும் விஷயத்தால் திருமணம் நின்றுபோக, தனக்கு ஏற்பட்ட பண இழப்பை சரி செய்ய வேண்டுமென முரளிதர் கூறுகிறார். படம் ஒன்றை எடுத்து பணத்தை தருவதாக சவால் விடும் விவேக் அதில் வென்றாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
2018-யில் வெளியான Ee Nagaraniki Emaindi படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் தாசிஸ்யம், அதன் இரண்டாம் பாகமாக இப்படத்தை இயக்கியுள்ளார். ஹேங் ஓவர் பட பாதிப்பில் படம் நகர்ந்தாலும், தெலுங்கு படங்களுக்கே உரிய டெம்ப்லேட்டை சரியாக கையாண்டுள்ளார் இயக்குநர்.
படத்தின் பிரதான நாதமாக இருப்பது நகைச்சுவைதான். முதல் பாதியில் வரும் காட்சிகள் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. ஆனால், இரண்டாம் பாதியில்தான் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பிளாஸ்ட் காமெடிகள் உள்ளன. என்றாலும் அவற்றை ரசிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் முதல் பாகத்தை பார்த்திருக்க வேண்டும்.

ஏனென்றால், இந்த நான்கு நண்பர்கள் கதாபாத்திரத்தின் தன்மையை முதல் பாகத்தில் காட்டியிருப்பதால், அவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பது நமக்கு முன்பே தெரிந்துவிடும்; அதுவே நம்மை சிரிக்க வைக்கவும் தூண்டும். கௌசிக் கதாபாத்திரத்தில் அபினவ் அசால்ட்டாக நடிக்கும் காட்சிகள் குபீர் காமெடி.
குறிப்பாக, நிஜ கரடி என்று தெரியாமலும், தெரிந்த பின்னும் அவர் செய்யும் விஷயங்கள் செம அலப்பறை. ஒருதலைக் காதலனாக வரும் ஸ்ரீநாத், காதலியைக் கண்டு பரிதவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். வெங்கடேஷ் கக்குமனு எடிட்டிங்கின்போது சட்டை தொடர்பான காமெடியில் கலகலப்பூட்டுகிறார்.

கதாநாயகனான விஷ்வாக் சென்னுக்கு அதிக வசனங்கள் இல்லை என்றாலும், விமானத்தில் அவர் செய்யும் அலப்பறையில் திரையரங்கே அதிர்கிறது. ஷிவாத்மிகா தனக்கான கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
அனிஷா, டாக்டர்.முரளிதர் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்துள்ளனர். விவேக் சாகரின் இசை, ஏஜே ஆரோனின் ஒளிப்பதிவு, ரவி தேஜா கிரிஜாலாவின் படத்தொகுப்பு என டெக்னிக்கலாக அனைத்தும் சிறப்பாக உள்ளன.
க்ளாப்ஸ்
- நடிகர்களின் பங்களிப்பு
- நகைச்சுவை காட்சிகள்
- இரண்டாம் பாதி
பல்ப்ஸ்
- பெரும்பாலும் முதல் பாகம் பார்த்தவர்களுக்கே இப்படத்தில் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கும்.
மொத்தத்தில் இந்த ENE Repeat லாஜிக் இல்லா மேஜிக்தான். முதல் பாகத்தைப் பார்த்தவர்கள் கண்டிப்பாக கொண்டாடலாம்.
