பாடகராகவும் களமிறங்கிய அபிஷன் ஜீவிந்த்! ‘பிக்காசோ’ படத்தின் ஹக்குனா மட்டாட்டா பாடல் வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்!
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அபிஷன் ஜீவிந்த். தொடர்ந்து ‘வித் லவ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில், தற்போது தனது அடுத்த திரைப்படமான ‘பிக்காசோ’ மூலம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.
கௌதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், கன்னட திரையுலகின் பிரபல நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷிவானி நாகாரம், யோகலட்சுமி, கானா வினோத் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பாடகராக அறிமுகமான அபிஷன்!
இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘ஹக்குனா மட்டாட்டா’ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் பாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், கதாநாயகனாக நடித்துள்ள அபிஷன் ஜீவிந்த் முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் தனது குரலைப் பதிவு செய்துள்ளார். துள்ளலான இசையுடன் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு தமிழ் ஆதவன் வரிகள் எழுதியுள்ளார். அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் குழுப் பாடகர்களாகப் பங்களித்துள்ளனர்.
இந்தப் பாடலை நடிகர் சூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2027 ஜனவரியில் வெளியாகும் பிக்காசோ!
இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த், தற்போது பாடகராகவும் புதிய அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் பல்வேறு கலைத்துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் அபிஷன் ஜீவிந்தின் இந்தப் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.